நினைவுகளில்

தோப்புக்காரர் நகர் திரு.லூர்து காலமானார் இறுதி ஊர்வலம் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும்.ஆலய ஒலிப்பெருக்கியின் வழியே பெரும் சத்தமாய் வந்து சிறிது சலனத்தை ஏற்படுத்தி மனதில் ஒரு நிசப்தத்தையும் விட்டு சென்றது அந்த மரண அறிவிப்பு.

எல்லா மரணங்களும் மனதில் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தி விடுவதில்லை. எல்லா மரணத்தின் சோகங்களும் வெகு நாட்கள் நிலைத்திருப்பதும் இல்லை.எல்லாம் கடந்து போகும் என்ற மன நிலையில் அமர்ந்திருந்த என்னை கடந்து சென்றது சில துக்க மரணங்களின் ஞாபகங்கள் குறிப்பாக ஜென்சியின் மரணம்.


அப்பொழுது ஏழாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன்.ஜென்சி, ஜெரோம் என்றால் பள்ளியில் ஓரளவு எல்லாருக்குமே தெரியும் .அவங்க ரெண்டு பேரும் மாதிரி நட்பா இருக்கணும் என்று எத்தனை வருடங்கள் கழித்து வேண்டுமானாலும் சொல்லலாம்.முதல் ரேங்க் எடுப்பதில் எல்லாருக்கும் போட்டி என்றால் இவர்களில் யார் முதல் ரேங்க்-ஐ யாருக்கு விட்டுக்கொடுப்பது என்ற போட்டி இருக்கும் . அவன் வாங்கும் திண்பண்டங்களில் சிறந்ததை அவளுக்கென ஒதுக்குவான் . இவளது பேனாவின் முதல் எழுத்தாளன் அவனாகத்தான் இருப்பான்.அவனது  ஜியோமன்டரி பாக்ஸ்-இன்  முதல் வரைபடம் அவளதுவாகத்தான் இருக்கும்.



சினிமா பாடல்களும், காதல்களும் ஏற்படுத்திய கலாசார சீர்கேட்டிற்கு முன் , குழந்தைகள் குழந்தையாக இருந்த காலம் அது என்பதால் இவர்களின் நட்பு தூய்மையான நட்பாகவே பார்க்கப்பட்டது ,இருந்தது .ஏப்ரல் 12 அவளுக்கு பிறந்தநாள் என அவளது பள்ளி சான்றிதல் பார்த்து தெரிந்து கொண்டான் மீனவ  பிள்ளைகளுக்கு பிறந்தநாள் என்பது விஷேசமான நாளாக இருப்பதில்லை, ஆனால் பலர், பிறந்தநாளுக்கு மட்டும் கலர் துணி உடுத்தி வருவதை இவன் பார்த்திருக்கிறான் என்பதால் இவளுக்கும் புது துணி வாங்கி தரவேண்டுமென எண்ணி அம்மா சேர்த்து வைத்திருந்த உண்டியலை எடுத்தான் அம்மா எவளவோ மறுத்தும் புது துணியும் வாங்கினான்.அவளது பிறந்த நாள் அவளுக்கே ஞாபகமிருக்க  வாய்ப்பில்லை என்பதால் புது துணி கொடுத்தால் சந்தோசப்படுவாள் என எண்ணியே உறங்க தயாரானான் .

அப்பொழுது கர கர குரலில் ஒலித்தது ஆலய ஒலிப்பெருக்கி.குருசடி தெரு ஜென்சி காலமானார் இறுதி ஊர்வலம் நாளை மாலை 5 மணிக்கு நடைபெறும்.அறிவிப்பு இவனுக்கு சரியாக கேட்கவில்லை என்பதால் ஆலயம் நோக்கி ஓடிக்கொண்டே அடுத்த அறிவிப்பினை நின்று கவனித்தான், பெயர்  ஜென்சி . !!

அவளாக இருக்க கூடாது என நினைத்து  பதறி துடித்து ஓடினான் அவளின் வீட்டை நோக்கி.என்றும் வெறிச்சோடி கிடக்கும் அவ்வீட்டுவாசல் கொஞ்சம் கூட்டத்தால் மறைந்திருந்தது . குடிகார நாயி இப்புடி என் புள்ளைய அடிச்சி போட்டு போயிட்டானே என இலங்கை கடற்படையால் கணவனை  இழந்த அவளின் தாய்,  அவளது கடைசி சொந்தத்தையும் பிரித்து சென்ற அந்த குடிகாரனை ஏசினால்.உடல் முழுவதும் கட்டுக்களுடன் , உறைந்த ரத்தம் அவளது கட்டுக்களின் வெளியே தெரிய கிடந்த ஜென்சியை பார்த்த அவன் அழுதுகொண்டே அவன் வீட்டிருக்கு ஓடிச்சென்று புது துணியை எடுத்துக்கொண்டு அதே வேகத்தில் ஓடி வந்து, இன்னிக்கும் வெள்ள டிரஸ் எதுக்கு கலர் போட்டுக்க என அவன் கதறி துடித்தது தான் அவன் சத்தமாக பேசிய கடைசி நிமிடமாக இருந்தது .

அமைதியாக அடக்கத்தை கருப்பு கொடியுடன் கூட்டி சென்று புதைத்து வந்தான் தோழியை .அடுத்த நாள் பேப்பரில்  அவளின் புகைப்படத்துடன் கார் மோதி சிறுமி பலி ,குடித்து விட்டு வண்டி ஒட்டிய டிரைவர் கைது என வந்த செய்தியை பார்த்ததும்  சிரித்தான் அதனுடன் பேச ஆரம்பித்தான் .அவள் தாய் அவனருகில் சென்றால் ,இவன் பேப்பரில் இருந்த ஜென்சியை பார்த்தே பேசிக்கொண்டிருந்தான் .அம்மா ஜென்சியை பாருமா நேத்து நாங்க கோவில்ல இருந்து வரும் போது அவ என் கூடத்தான் நடந்து வந்தா ,அவளுக்கு சாகவே புடிக்கலைன்னு சொன்னாமா .என்ன விடவா ஆண்டவருக்கு  அவல ரொம்ப புடிக்கும்? என ஜெரோம் கேட்ட கேள்விக்கு அவளால் அழுகையை மட்டுமே பதிலாக கொடுக்க முடிந்தது .பள்ளிக்கூடம்  அவன் செல்ல மறுத்ததால் வீட்டிலேயே இருந்தான்.

ஒரு மரணம் மனிதனை இத்தனை  தூரம் கூட பாதிக்கலாமோ என எண்ணிக்கொண்டிருந்த என்னை எனது தாய் அழைத்தால் ,வர்றம்மா என அடுப்படி நோக்கி செல்லும் போது தான் கவனித்தேன் தாயின் புகைப்படத்தில் மாலையை .


-நினைவுகளில் இருக்கும் வரை மரணித்தவர்கள் நம்மை பிரிவதில்லை .



கற்பனையும் ஆக்கமும்
அ .பிரிட்மன் 

No comments:

Post a Comment