Most Loving Bible Verses




"யார் யாருக்கு இரக்கம் காட்ட விரும்புகிறேனோ, அவர்களுக்கு இரக்கம் காட்டுவேன்; யார் யாருக்குப் பரிவுகாட்ட விரும்புகிறேனோ, அவர்களுக்குப் பரிவுகாட்டுவேன்"

உரோமையர்: 9:14-23


14 அப்படியானால் என்ன சொல்வோம்? கடவுள் நேர்மையற்றவரா? ஒருபோதும் இல்லை.

15 ஏனெனில், அவரே மோசேயிடம், "யார் யாருக்கு இரக்கம் காட்ட விரும்புகிறேனோ, அவர்களுக்கு இரக்கம் காட்டுவேன்; யார் யாருக்குப் பரிவுகாட்ட விரும்புகிறேனோ, அவர்களுக்குப் பரிவுகாட்டுவேன்" என்றார்.

16 ஆகவே, மனிதர் விரும்புவதாலோ உழைப்பதாலோ எதுவும் ஆவதில்லை; கடவுள் இரக்கம் காட்டுவதாலேயே எல்லாம் ஆகிறது.

17 பார்வோனுக்கு மறைநூல் கூறுவதும் இதுவே; "உன் வழியாய் என் வல்லமையைக் காண்பிக்கவும் என் பெயரை நாடெங்கும் அறிக்கையிடவுமே நான் உன்னை நிலைக்கச் செய்தேன்."

18 ஆகவே, கடவுள் தாம் விரும்புவது போலச் சிலருக்கு இரக்கம் காட்டுகிறார்; வேறு சிலரைக் கடின உள்ளத்தினர் ஆக்குகிறார்.

19 "அப்படியானால், கடவுள் மனிதர் மீது எப்படிக் குற்றம் சுமத்தமுடியும்? அவருடைய விருப்பத்தை யாரும் எதிர்க்க முடியாதல்லவா?" என்று நீங்கள் கேட்கலாம்.

20 மனிதர்களே! கடவுளை எதிர்த்துப் பேச நீங்கள் யார்? உருவாக்கப்பட்ட பொருள் தன்னை உருவாக்கியவரிடம், "ஏன் என்னை இவ்வாறு செய்தாய்?" எனக் கேட்குமோ?

21 ஒரே களிமண்ணைப் பிசைந்து மதிப்புள்ள கலனையோ மதிப்பற்ற கலனையோ வனையக் குயவனுக்கு உரிமை இல்லையா?


22 தமது சினத்தைக் காட்டவும் தமது வல்லமையை விளங்கச் செய்யவும் கடவுள் விரும்பியபோதிலும், அழிவுக்கும் அவருடைய சினத்துக்கும் இலக்கான கலன்களைப் பொறுத்தவரையில் அவர் மிக்க பொறுமை காட்டினாராயின், யார் என்ன சொல்ல முடியும்?


23 அவரது இரக்கத்திற்கு உரித்தான கலன்கள் மாட்சி பெறவேண்டும் என்று முன்னேற்பாடு செய்திருந்தார். அக்கலன்களைப் பொறுத்தவரை அவர் தமது அளவற்ற மாட்சியை வெளிப்படுத்த விரும்பினார்.